எங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் உரையாற்றினார்.

ஏப்ரல் 26 முதல் 29 வரை நடைபெறவிருக்கும் 77 வது அமர்வின் தொனிப்பொருள் ´ஆசிய-பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு, முன்பை விட வலுவான நெருக்கடி மூலம் கட்டியெழுப்புதல்´ என்பதாகும்.

இந்த அமர்பில் கொவிட் -19 தொற்றுநோய் பற்றி பிரதானமாக விவாதிக்க்பபட்டு வருவதுடன், காலநிலை மாற்றம், கடன் நிவாரணம், முதலீடு, சம சுகாதார அணுகல், நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்படும்.

அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.தற்போது காணப்படும் சவால்களுக்கு மத்தியில் இந்த அமர்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறிப்பிடதக்கதாகும்.

தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதார மற்றும் சமூக நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் மூலோபாய திட்டங்களை உருவாக்கும் நேரத்தில் இந்த அமர்வின் தொனிப்பொருள் மிகவும் காலத்திற்கு உகந்தது என நான் நம்புகிறேன்.

கடந்த காலத்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது.

விசேடமாக கொவிட் நோயாளர்களை அடையாளம் காணல், அவர்களின் தொடர்புகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல், தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் குறைந்தபட்ச இறப்பு விகிதத்தை எங்களால் பராமரிக்க முடிந்தது.

இலங்கை ஒரு வலுவான பொது சுகாதார திட்டத்தை கொண்டுள்ளது. இலவச சுகாதார வசதிகள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவியது.

கடந்த பெப்ரவரி மாதம் நமது அரசாங்கத்தால் 100,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்க முடிந்தது.

இந்த பின்னணியில், தொற்றுநோய் இருந்தபோதிலும், பல துறைகளின் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளை பராமரிக்க நாங்கள் பணியாற்றியுள்ளோம். அதேபோன்று எங்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயற்படுத்தி ஜனவரி மாதம் முதல் எமது சுற்றுலா வணிகத்தை மீண்டும் தொடங்க முடிந்தது.

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்காக பல மீள் நிதியளிப்பு திட்டங்களை செயல்படுத்தியது.

தற்போதுகூட, உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நமது அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு எனது தலைமையின் கீழ் ஒரு உள்ளக அமைச்சுக்களின் வழிநடத்தல் குழு நிறுவப்பட்டுள்ளது.

2021-2030 ஐ திறன் மேம்பாட்டு தசாப்தமாக அரசு அறிவித்துள்ளதால், எங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

பிராந்திய உறவுகளை வலுப்படுத்தவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு பல துறைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

-தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய நாடுகள் அந்நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உதவுதல்
-வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை மேம்படுத்தி அதற்கு ஊக்குவித்தல்
-சுற்றுச்சூழல் சுகாதார சுற்றுலாவை ஊக்குவித்தல்
-அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் முதலீடுகளுக்கு ஊக்குவித்தல் மற்றும் அவர்களுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்தல்

என்பன அவற்றில் முக்கியமானவையாகும். இறுதியாக கொவிட்-19 தொற்று நிலைக்கு மத்தியில் மீண்டும் மீளெழுவதற்கு காலத்திற்கு உகந்த இந்த அமர்வை ஏற்பாடு செய்து, உறுப்பு நாடுகளை ஒரு அரங்கில் ஒன்றிணைய செய்வதற்கான ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை பாராட்டுகின்றோம்.

அமர்வின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

Previous articleதமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் உணர தொடங்கியுள்ளனர்!
Next articleஇன்றைய ராசிபலன்-27.04.2021