இந்தியாவை உலுக்கும் கொரோனா: வயோதிபப் பெற்றோரை வீதியிலேயே விட்டுச் செல்லும் பிள்கைகள்!

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உக்கிரமாக தாக்கி வருகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக, தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

நேற்று, இந்தியாவில் 354,531 கொரோனா தொற்றுகள் மற்றும் 2,806 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இந்தியா கொரோனா தொற்றின் உச்சத்தை இன்னும் எட்டவில்லையென இந்திய மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். மே மாதத்தின் 2-3வது வாரத்திலேயே இந்தியா தொற்றின் உச்சத்தை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதத்திற்குள் தினசரி 500,000 தொற்றாளர்களும், 5,700 க்கும் அதிகமாக மரணங்களும் பதிவாகலாமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கோவிட்டின் இரண்டாவது அலையின் உச்சத்தை இந்தியா இன்னும் எட்டவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையில், அதிகரித்து வரும் மரணங்களால், தகனம் செய்ய முடியாத நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

உடல்களை தகனம் செய்ய போதுமான ஆட்கள் இல்லாமையினால், கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உறவினர்களே பல பகுதிகளில் இறுதி சடங்குகளை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற மருத்துவ பணியாளர்களை கடமைக்கு திரும்ப இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாளை முதல் 02 வார காலத்திற்கு கர்நாடக மாநிலத்தை லொக் டவுன் செய்ய அதிகாரிகள் இன்று முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை, கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்கள் புதைக்கப்படும் புதுதில்லியில் மிகப்பெரிய முஸ்லீம் கல்லறை போதுமானதாக இருக்காது என்று அதன் பாதுகாவலர்கள் அஞ்சுகின்றனர்.

இதற்கிடையில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட தமது முதிய பெற்றோரை பிள்ளைகள் வீதியில் விட்டுச் சென்றது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இவ்வாறு கைவிடப்பட்ட தாயொருவர் கான்பூர் பகுதியில் இறந்து கிடந்தார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

கொரோனாவால் மரணத்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் ஒன்றிலிருந்து சடலம் விழும் வீடியோ ஒன்று சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

டெல்லி, நொய்டா மற்றும் லக்னோ உள்ளிட்ட பல பகுதிகளில், கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இடவசதி இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. பல இடங்களில் ஒட்சிசனை பெறுவதற்கு கறுப்பு சந்தைகளில் பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது.

6,000 இந்திய ரூபாய் செலவாகும் ஒட்சிசன் சிலிண்டர் தற்போது 50,000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமன்னாரில் 2 வாரங்களில் தொற்றாளர்கள் அதிகரிக்கலாம்!
Next articleகொழும்பின் பிரதான பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா!