இந்தியாவில் கோவிட் கோரத்தாண்டவம் – செல்வந்தர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்?

இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நாளாந்த பாதிப்பு எண்ணிக்கை உச்சம் கண்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் 362,902 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3285 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, உலக அளவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் தற்போது வரை 17,988,637 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 201,165 பேர் உயிரிந்துள்ளனர்.

14,807,704 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,979,768 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8,944 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலங்களில் கோவிட்டை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசாரம், ஆன்மிகம், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது. திருமணத்தில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

மால்கள், தியேட்டர்கள், உணவகங்கள், மதுபான பார்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், நீச்சல் குளங்கள், ஆன்மிக தலங்களை மூடலாம். இரவுநேர ஊரடங்கை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவில் கோவிட் அச்சுறுத்தல் வெகுவாக அதிகரித்துள்ள பின்னணியில், அந்த நாட்டிலுள்ள செல்வந்தர்கள் தமது குடும்பத்தாருடன், தனி விமானங்களில் இந்தியாவை விட்டு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவூட் நடிகர்களும் தனி விமானங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous articleஎதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகள் முடங்கலாம் – தயார் நிலையில் இருக்குமாறு மக்களுக்கு இன்று அறிவிப்பு
Next articleகோவிட் உடல்களை எரிக்க வழியில்லை, பூதவுடல்களுடன் வாழும் அவலம்!