மரக்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டதால் மரக்கறிகள் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக அரசாங்கம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் தற்காலிக தீர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும் அச்சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டிய அபாயத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நோய்தொற்று மத்தியில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பது முக்கியம் என்றாலும், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் உடனடியாக தீர்வினை வழங்க வேண்டும் என்றும் நாமல் கருணாரத்ன கேட்டுக்கொண்டார்.

Previous articleபல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு
Next articleமூச்சுவிட முடியாமல் மூவர் மரணம்!