வைத்தியசாலையில் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் பல்வேறு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனரென, களுத்துறை- நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (26) அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தனர். பின்னர் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மூவரும்,பதுரலிலியைச் சேர்ந்த 76 வயது, பெல்பொலையைச் சேர்ந்த 70 வயது மற்றும் மத்துகமயைச் சேர்ந்த 83 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் 3ஆவது அலையில் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வரும்போதே, நோயின் முற்றிய நிலையிலேயே வருவதாகவும் இது மிகவும் அபாயகரமானதென்றும் எனவே மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களை அடையாளம் காண்பதற்காக, குறித்த பிரதேசங்களுக்கு சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.