மட்டக்களப்பு நகர வீதிகளில் முகக்கவசம் அணியாது பயணித்த 177 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்தார்.
இவர்களில் வங்கி ஊழியர்களும் பொலிஸாரும் உள்ளடங்குகின்றதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, மட்டக்களப்பு நகர்ப் பகுதியான அரசடி வீதிச் சுற்றுவட்ட பிரதான வீதியால் மோட்டர் சைக்கிள்கள் மற்றும் பஸ்களில் பயணித்தவர்களை நிறுத்திய பொலிஸார், அவர்களில் முகக்கவசம் அணியாது பயணித்த 177 பேருக்கு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பரிசோதனையில் வங்கி ஊழியர்கள் மூவருக்கும் வங்கி ஊழியர் ஒருவரின் உறவினருக்கும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஒருவர் உட்பட 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் மேலும் தெரிவித்தார்.