உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
குறித்த தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம், தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
28 வயதுடைய காத்தான்குடி பகுதியை சேர்ந்த ராஸிக் ராஸா எனும் நபர் கல்முனை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை தீவிரவாத ஒழிப்பு பிரிவினரின் கோரிக்கைக்கு ஏற்ப குறித்த சந்தேக நபரை மீண்டும் அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.