‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு பகுதியில் கடலை பகுதியை மூடி இந்நகரம் உருவாக்கப்பட்டுகிறது.

ஏறக்குறைய 216 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்நகரம் உருவாக்கப்படுகிறது. இதில், 116 ஹெக்டேர் நிலப்பரப்பு சீனக் கம்பனிக்கு உரித்தாக இருக்கும். சுமார் 90 ஹெக்டேர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தின் உரித்தாக இருக்கும்.

Advertisement

சீனக் கம்பனிக்கு உரித்தாகவுள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பு முழுக்கமுழுக்க அந்தக் கம்பனிக்கே சொந்தமாக மாற்றப்பட்டுவிடும். அது இலங்கைத் தீவின் சட்டதிட்டங்களுக்கு உட்படாது. சீன கம்பனியே கடந்த தேர்தல்களின் போது ராஜபக்ஷக்களுக்கு பெருமளவு நிதியுதவிகளை வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இவ்வாறு கடலை மூடி ஏன் ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே கேட்கப்பட்டது. இலங்கை தீவில் குறிப்பாக கொழும்பில் போதிய அளவு நிலம் இருக்கத்தக்கதாக எதற்காக கடலை மூட வேண்டும் என்ற கேள்வி அப்போது எழுந்தது. கேள்விக்கு உரிய பதில் எதுவெனில் கொழும்பின் இதயமான பகுதியில் சீனா ஒரு நகரத்தைக் கட்டியெழுப்ப விரும்பியது என்பதுதான்.

கொழும்பின் ஏனைய பகுதிகளில் நிலத்தை வாங்கி அந்த நகரத்தை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை. கொழும்பின் இதயமான பகுதியில் அதிலும் குறிப்பாக அரசியல் அதிகாரத்தின் மையம், கொழும்பு மேட்டுக்குடியின் மையம், ராஜதந்திரிகளின் மையம், நிதி நடவடிக்கைகளின் மையம், உல்லாசப் பயணிகளின் கவர்ச்சி மையம் என்று கருதத்தக்க ஓரிடத்தில் கடலில் சீனா ஒரு புதிய நகரத்தைக் கட்டிவருகிறது.

இதனால், இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவின் நிலப்பரப்பு அதிகரித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபோது இடைநிறுத்தப்பட்டது. எனினும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தோடு சீனா மேற்கொண்ட சமரச முயற்சிகளின் பின்னர் இந்நகரம் சர்வதேச நிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டு மறுபடியும் தொடர்ந்து கட்டப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக உடன்படிக்கை மீள எழுதப்பட்டது.

இந்நகரத்தை, நிர்வகிப்பதற்காக அரசாங்கம் அண்மையில் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இச்சட்டமூலம் முன்பு சொன்ன சீனக் கம்பனிக்கு அதிகம் அனுகூலங்களை வழங்குகிறது. அது குறிப்பிட்ட துறைமுக நகரத்தை ஒரு சீன மாநிலமாக மாற்றுகிறது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டுகிறது.

இலங்கை தீவில் இதுபோன்ற முதலீடுகளுக்கு முதலீட்டு சபைச் சட்டம், மூலோபாய அபிவிருத்திச் சட்டம் என்ற இரண்டு சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் மூலமாகவும் வரிச் சலுகைகளை வழங்க முடியும். ராஜபக்ஷக்கள் சீன முதலீடான சங்கரில்லா ஹோட்டலுக்கு இவ்வாறு இருபத்தைந்து வருட வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கம்பனிக்கு வரிச் சலுகைகளை வழங்கியிருந்தார். இவ்வாறு இரண்டு சட்டங்கள் இருக்கத்தக்கதாக இப்பொழுது ஒரு புதிய சட்டமூலத்தை ஏன் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கிறது?

இதன்மூலம் துறைமுக நகரத்தை நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஒன்றாகவும் தனி விசேட அந்தஸ்தைப் பெற்ற ஒரு சுயாதீன நகரமாகவும் ராஜபக்ஷக்கள் கட்டியெழுப்ப முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இவ்வாறு எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பின்வருமாறு தொகுத்துப் பார்க்கலாம்,

முதலாவது, துறைமுக நகரம் எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்தினதும் ஆளுகைக்குள் வராத ஒரு விசேட கட்டமைப்பாக இயங்கும். உள்ளுராட்சி மன்ற நிர்வாகங்களை அங்கு வாழும் மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், துறைமுக நகரத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு விசேட ஆணைக்குழுவே நிர்வகிக்கும். இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இலங்கை பிரசைகளாக இருக்க வேண்டும் என்றில்லை.

இரண்டாவது, இந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு எதிராக இலங்கை தீவில் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாத விடுபாட்டுரிமை உண்டு.

மூன்றாவது, இந்த ஆணைக்குழுவிற்கு விசேட நிதிசார் அதிகாரங்கள் உண்டு. இந்த ஆணைக்குழுவுக்கு தனியொரு நிதியம் உண்டு. அரச வருமானத்தின் திரட்டப்பட்ட நிதியில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் தேவை.

ஆனால், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவானது நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் தேவைப்படாத தனியொரு நிதியம் ஒன்றைப் பேண முடியும்.

நாலாவது, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கும் அதிகாரம் உண்டு. பொதுவாக நாடாளுமன்றத்தால் மாத்திரமே வரிச்சலுகை வழங்கப்படலாம். இங்கே இந்த ஆணைக்குழுவுக்கு வரிச்சலுகை வழங்கும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதாக, அரசாங்கத்துக்குக் கிடைக்கும் பணம் கணக்காய்வாளர் தலைமை நாயகத்தின் மேற்பார்வைக்குக் கட்டுப்படும். ஆனால், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் நிதி நடவடிக்கைகள் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாகவே அவை கணக்காய்வு செய்யப்படும்.

ஆறாவது, அரச நிறுவனங்கள் நாடாளுமன்றத்தின் கோபா (COPA) மற்றும் கோப் (COPE) ஆகிய குழுக்களுக்கு முன்னாள் பதில் கூறுமாறு அழைக்கப்படலாம். ஆனால், இது துறைமுக நகரப் பொருளாதார வலைய ஆணைக்குழுவுக்குப் பொருந்தாது.

ஏழாவது, துறைமுக நகரத்தில் வெளிநாட்டவர்கள்தான் முதலீடு செய்யலாம். இலங்கையர்கள் முதலீடு செய்வது என்றால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கூடாகத்தான் முதலீடு செய்யலாம்.

எட்டாவது, துறைமுக நகரத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஊழியம் சீன நாணயமான யுவான் மூலமே வழங்கப்படும்.

ஒன்பதாவது, துறைமுக நகரத்தில் சேவையாற்றுபவர்களின் வருமானம் வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது.

பத்தாவது, இலங்கை பிரசைகள் கொழும்புத் துறைமுக நகரத்தின் சேவைகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். எனினும், அங்கே கொள்வனவு செய்யும் பொருட்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவரும்போது அவற்றுக்கு வரி செலுத்தவேண்டும்.

பதினொராவது, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் ஏற்படும் பிணக்குகளை சர்வதேச விளக்கத்திற்கும் அமைப்பு ஒன்றின் மூலமாகவே தீர்த்துக் கொள்ளலாம்.

இவையாவும் துறைமுக நகரத்துக்கான புதிய சட்டமூலத்தைக் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் ஆகும். இக்குற்றச்சாடுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளில் பிரதானமான சஜித் அணி இந்நகரத்தை சீன ஈழம் என்று வர்ணிக்கிறது.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், சீனப் பட்டினத்துக்கு எதிராக சிங்களப் பொது உளவியலைத் தூண்டிவிட அவர்கள் கையிலெடுத்திருப்பது ஒரு விதத்தில் தமிழின எதிர்புத்தான். அதாவது, சீனப் பட்டினத்தை அவர்கள் ஈழத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஈழத்தைக் கொடுக்காத நாங்கள் எப்படி சீனாவுக்கு இப்படியொரு நகரத்தைக் கொடுப்பது என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நாட்டில் சிங்கள மக்களைத் தூண்டுவதற்கு ஏதோவொரு விதத்தில் இனவாதத்தைத்தான் பேசவேண்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின்படி துறைமுக நகரமானது இலங்கை தீவில் தற்போது நடைமுறையில் உள்ள 21 சட்டங்களிலிருந்து விடுபாட்டுரிமையைக் கொண்டிருக்கிறது.

இது, துறைமுக நகரத்தை இலங்கை தீவில் தனி அந்தஸ்துடைய இலங்கை தீவின் பெரும்பாலான சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஒரு தனி நிர்வாக பிரதேசமாகக் காட்டுகிறது.

ராஜபக்ஷக்கள் பெருமையோடு கூறிக்கொள்கிறார்கள் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே சட்டம் என்று. ஆனால், சீன துறைமுக நகரமானது அவ்வாறு நாட்டில் ஒரே சட்டம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அதுதான் உண்மை.

தமிழ் மக்களை நசுக்குவதற்காக எந்தப் பிசாசோடும் கூட்டுச்சேரத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன கூறினார். இவ்வாறு பிசாசுகளை கூட்டுச் சேர்த்து தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கிய இலங்கை அரசாங்கம் இப்பொழுது அந்தப் பிசாசின் கடன் பொறிக்குள் இருந்து விடுபட முடியாத ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இலங்கையில் இப்பொழுது கிட்டத்தட்ட ஆறு இலட்சம் சீனர்கள் இருப்பதாக ஒரு உத்தியோகபூர்வமற்ற கணக்கு உண்டு.

இம்மாத இறுதிளவில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகிறார். ஏறக்குறைய அதே காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டபாய இந்தியாவுக்குச் செல்கிறார். ஒரே சமயத்தில் அவர்களால் சீனாவையும் இந்தியாவையும் கையாளக் கூடியதாக இருக்கிறது. இந்தியாவை சமாளிப்பதன் மூலம் மேற்கு நாடுகளையும் ஜெனிவாவையும் சமாளிக்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

சீனாவின் செல்லப்பிள்ளையாக இருப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள் உட்பட எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், சீனாவை நோக்கி அதிகமாகச் சாய்ந்து கொண்டு இலங்கை தீவு சுயாதீனமாக இறைமையோடு இருக்க முடியாது என்பதைத்தான் கடந்த 12 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன.

மெய்யான பொருளில் கூறின் இலங்கைத்தீவு இப்பொழுது இறைமையுடைய நாடு அல்ல. அது பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பம். சீன மயமாதலின் விளைவாக இச்சிறிய தீவை நோக்கி இந்தியாவும் மேற்கு நாடுகளும் அதிகம் கவனத்தைக் குவிக்கும். அவர்கள் அதற்கு எடுத்துக் கையாளும் ஆயுதம் தமிழ் மக்களின் பிரச்சினையாகும். தமிழ் மக்களின் விவகாரத்தை அல்லது தீர்க்கப்படாத இனப் பிரச்சினையை ஒரு கருவியாகக் கையாண்டு வெளிச் சக்திகள் இலங்கைக்குள் நுழைகின்றன. சீனாவும் அப்படித்தான் நுழைந்தது.

அழகிய இச்சிறிய தீவை தமிழ் மக்களோடு சேர்ந்து பகிரத் தயாரற்ற சிங்கள ஆட்சியாளர்கள் அதனை இறுதியிலும் இறுதியாக சீனர்களும் உட்பட வெளிநாட்டவர்களிடம் இழந்து வருகிறார்கள் என்பதே சீனப் பட்டினம் உணர்த்தும் உண்மையாகும்.

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்