மனத் தூய்மையுடன் எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்- பழனிசாமி, பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளனர்.

அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க.வின் கொள்கை வழிநின்று பணியாற்றுவோம் என அறிவித்துள்ளனர்.

அத்துடன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தமக்கு வாக்களித்த வாக்காளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றியிருக்கும் அரும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சியாகவும் மற்றொரு பக்கம் எதிர்க் கட்சியாகவும் இருக்கும்.

அந்தவகையில், ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதிசெய்யும் அச்சாணியாகச் செயற்பட வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமிழக சட்டமன்றத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் பணியாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எம்.ஜி.ஆர். இனால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு ஆல்போல் வேரூன்றியிருக்கும் அ.தி.மு.க. தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு அ.தி.மு.க. உடன்பிறப்புகள் உறுதியெடுக்க வேண்டுமென அவர்கள் குறித்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (04.05.2021)
Next articleசர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!