இந்தியாவில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு கொரோனா!

இந்தியாவில் முதன் முறையாக உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் சுமார் 10 வயதுடைய 12 சிங்கங்கள் பராமரிக்கப்படுகின்றன . அதில் சில சிங்கங்களிடையே பசியின்மை, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதை வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் அவதானித்ததையடுத்து கடந்த 24ம் தேதி கால்நடை அதிகாரிகள், சிங்கங்களின் ஓரோபார்னீஜியல் (குரல்வளையின் ஒரு பகுதி) மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் பூங்காவில் இருந்த தலா நான்கு ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் என மொத்தம் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நேரு விலங்கியல் பூங்கா கண்காணிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் சித்தானந்த் குக்ரெட்டி தெரிவிக்கையில் ‘சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது உண்மைதான். ஆனால், கொரோனா பரிசோதனை அறிக்கைகளை நான் இன்னும் பெறவில்லை’ என்றார்.

இதேபோல், வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஷிரிஷ் உபாதி கூறியதாவது,நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 8 புலிகள் மற்றும் சிங்கங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டன. இருப்பினும் காட்டு விலங்குகளில் இதுபோன்ற பாதிப்புகள் இருப்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், ஹாங்காங்கில் வளர்ப்பு பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
என அவர் தெரிவித்திருந்தார்.

Previous articleதடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்!
Next articleபேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து!