சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பு சாதாரண தரத்தில் திறமையாகக் சித்தி பெற்ற எல்லைக்கிராம, மிகவும் பின்தங்கிய கிராம மாணவர்களையும் உள்வாங்கி, க.பொ.த உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவில் கற்க முன்வருபவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி, கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் கல்விப் பணியாற்றி வருகின்றது.
இது வரை 6 தொகுதி 73 மாணவர்கள் கல்வி கற்று நிறைவு செய்துள்ளார்கள். இவர்களில் மருத்துவத்துறைக்கு 03 பேரும், பொறியியலதுறைக்கு 06 பேரும் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக கல்வியைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இத்துடன் ஏனைய துறைகளுக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி கற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இதில் எமது 7 வது தொகுதி 10 மாணவ, மாணவிகளில் 03 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவாகி பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவர்களில் துறைநீலாவணையைச் சேர்ந்த தங்கவேல் மிதுசாளினி 2A, B மாவட்ட நிலை 14, தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்ட குடியேற்றக்கிராமத்தை சேர்ந்த அனுசா திருநாவுக்கரசு A, 2B, மாவட்ட நிலை 30, காக்காச்சிவெட்டை சேர்ந்த தியாகலிங்கம் டிலக்ஷன் 2A, B, மாவட்ட நிலை 20 ஆகிய எல்லைக்கிராம மாணவர்கள் தமது கிராமங்களில் முதலாவது மருத்துவர்களாக வருவது அக்கிராமங்களுக்கும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பிற்கும் பெருமை.
தங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிய சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பிற்கும் வழிநடத்திய அமைப்பின் பொருளாளர் ந.குபேந்திரராஜா அவர்களிற்கும் நன்றியை மாணவர்கள் தெரிவித்தனர்
இதில் இன்னுமொரு விடயம் தொட்டுச் சொல்ல வேண்டிய விடயமாக உள்ளது. அமரர் சங்காரவேல் அவர்களால் உருவாக்கப்பட்டதே தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டக் கிராமம் ஆகும். அவரின் வழியில் அவரது குடும்பத்தினர் கல்வியில் அக்கறை கொண்டு அக்கிராமத்தில் முதலாவது மருத்துவரை உருவாக்கியிருப்பது. அவர்கள்; தமிழ் இனத்தில் பால் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது. அவர்களது பணி காலத்தால் அழியாதது.
மேலும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினால் நாவிதன்வெளியில் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன . இந்த திட்டத்தின் மூலம் நாவிதன்வெளி மற்றும் அருகே உள்ள ஊர்களை சேர்ந்த மாணவர்கள் பயனடையவுள்ளனர்.