மக்களுக்கு தேவையான முழுமையான கொவிட் தடுப்பூசியை வழங்க முடியும்

நாட்டு மக்களுக்கு தேவையான முழுமையான கொவிட் தடுப்பூசியை வழங்க முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்வதாகவும், இந்த வருடத்திற்குள் நாட்டு மக்கள் தொகையில் 63 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை ஏற்றும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நேற்று காலை 11 மணிக்கு ஆரம்பமானது.

இதில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, 13 மில்லியன் ரஷ்ய ´ஸ்புட்நிக்´ 5 என்ற கொரோனா தடுப்பூசி மருந்திற்கான பெறுகையை சமர்ப்பித்துள்ளோம். இதில் முதல் தொகுதியாக 15 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று எமக்கு கிடைத்துள்ளன. ஏனைய தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக நாட்டிற்கு கொண்டுவரப்படுமென அமைச்சர் கூறினார்.

நாட்டில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு நாம் 5 ஆயிரம் ரூபாவை வழங்கினோம், கொவிட் தொற்றுக்குள்ளான மக்களுக்கு சிறப்பான சுகாதார வசதிகளை வழங்கி உயிரிழப்புக்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம் என்று தெரிவித்த அமைச்சர், கொவிட் 19 மூன்றாவது அலை தொடர்பாக குறிப்பிடுகையில் தொற்றுக்குள்ளாவோரின் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் 13 ஆயிரம் 800 கட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் தினங்களில் மேலும் 10 ஆயிரம் கட்டில்கள் ஏற்பாடு செய்யப்படும். இதேபோன்று வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒட்சிசனை வழங்குவதற்கு சடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்சிசன் தேவையை 23 தொன்னில் இருந்து 80 தொன்னாக அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Previous articleநாட்டில் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு!
Next articleதனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்!