ஜனநாயக விரோத அடக்குமுறைகள் தொடர்வதை அவதானிக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கின்றார்.
அதனைவிட அசேல சம்பத் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். வீதியில் சென்ற நபர் ஒருவர் ஒலி எழுப்பினார் என்ற காரணத்திற்காக கைது செய்தமையை வீரச் செயலாக காட்டிக்கொள்கின்றார்கள்.
இவை மிகமுக்கியமான விடயங்களாக நாம் காணவில்லை. கரண்ணாகொட 11 பேரை கொலை செய்த விடயத்தை தெரிவித்தபோது நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு உறுப்பினர் பல விளக்கங்களை கொடுத்தார்.
யுத்தத்தில் சிறப்பாக ஈடுபட்டார் என்பதற்காக, மனித படுகொலையை செய்வதற்கு யாருக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். நீங்களும் நாளை அதற்கு ஆளாகலாம்.
இராணுவத்தில் இருந்தமைக்காக கொலைகளை செய்ய முடியாது. கொலைகாரர்களை பாதுகாக்கும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. கொலைகாரரான சுனில் ரத்நாயக்கவிற்காக அனுதாபப்பட முடியாது.
தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தை நடத்தியது யாரென மக்களுக்கும் தெரியும். நான் யுத்தத்தை சரியாக செய்தமையால்தான் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள். ஆகவே தமிழ் மக்கள் இராணுவத் தளபதிக்கு வாக்களித்தார்கள் எனின் இதுத் தொடர்பில் நாம் பெருமைப்பட வேண்டும்.