தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த இளம் பெண்ணை காப்பாற்ற சென்ற மாணவன் பரிதாபமாக பலி!

எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த இளம் பெண்ணை காப்பாற்ற சென்ற மாணவன் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியில் வசித்து வரும் முகமது ரஃபி என்பவரது மகன் நிஷாரஹீப் (17). இவர், அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நிஷாரஹீப் நண்பர்களுடன் அலங்கியம் சீத்தகாடு பகுதியில் உள்ள அமராவதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது இவரின் அருகே குளித்துக் கொண்டிருந்த பெண், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார்.

அதைக் கண்ட நிஷாரஹீப், நீரில் மூழ்கி அந்தப் பெண்ணை மேலே தூக்கி விட்டு அவரின் உயிரை காப்பாற்றினார்.

அதே சமயத்தில் அவருடைய கால்கள் சேற்றுப் பகுதியில் மாட்டிக்கொண்ட கால்களை எடுக்க முயற்சித்தபோது நீரில் மூழ்கி மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் மாணவர் நிஷாரஹீப் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Previous articleசொட்டை விழுந்த இடத்தில் கூட கிடுகிடுன்னு முடி வளரணுமா? கிரீன் டீ 3 ஸ்பூன் போதும்!
Next articleமகளுடன் தனியாக வாழ்ந்துவந்த வழக்கறிஞர் : யோகா டீச்சரை கொலை செய்து புதைத்த கொடூரம்