இந்தியாவில் ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாள் பாதிப்பு நான்கு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நான்கு இலட்சத்து 12 ஆயிரத்து 618 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு இரண்டு கோடியே 10 இலட்சத்து 70 ஆயிரத்து 852ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஒரேநாளில் மூவாயிரத்து 982 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ள நிலையில் இன்னும் 35 இலட்சத்து 66 ஆயிரம் பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 16 கோடியே 25 இலட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Previous articleநாடளாவிய ரீதியில் 50 கிராம சேவையாளர்களுக்கு கொரோனா!
Next articleகொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!