ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அருகில் அதன் ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குடியிருப்பில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 300 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு உதவ சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், குடியிருப்பில் வசிக்கும் இஸ்ரோ ஊழியர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் காய்கறிகளை வழங்கவும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சோதனை ஓட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.