பி.சி.ஆர் பரிசோதனையின் போது ஆசிரியை ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொது சுகாதார ஆய்வாளரை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதிவான் நலக ஜெயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளம் ஆசிரியையின் வீட்டிற்கு சென்று அவரிடம் பிசிஆர் சோதனை செய்ய முயன்ற சமயத்தில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்ற குற்றச்சாட்டில் சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிசார் கோரினர்.
எனினும், சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றச்சாட்டை மறுத்தார். சந்தேக நபர் கடமையில் இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த ஒரு குழுவினரால் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பிசிஆர் சோதனைக்காக ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற போது ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு, அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் குறிப்பிட்டார்.