இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

எனினும் தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இதனால் வைத்தியசாலைகள், இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் சிகிச்சை படுக்கை பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் நேற்று ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , 800 இற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் உள்ளிட்ட சகல கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மேல் மாகாணத்தில் பல பகுதிகள் முடக்கப்பட்டதோடு , வெலிசறை பொருளாதார மத்திய நிலையமும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவு

நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் அதே நேரம் , அதற்கு சம அளவிலானோர் குணமடைந்து வீடுகளுக்குச் செல்லவில்லை.

எனவே வைத்தியசாலைகளிலும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கிறது.

இவ்வாறான நிலைமை தொடரும்பட்சத்தில் சிகிச்சைகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எனவே இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்

Previous articleவவுனியாவில் நீரில் மூழ்கிய குடும்பஸ்தரை காணவில்லை
Next articleயாழ்.மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!