எவ்வாறான சூழ்நிலையிலும் நாட்டின் அபிவிருத்தியை நாம் கைவிட்டதில்லை

நாம் நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம் என அலரி மாளிகையில் இன்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டளவில் திட்டமிடல் நிறைவுசெய்யப்பட்டிருந்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் பிரதமரின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான 24 கிலோமீற்றர் வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் போது இரத்தினபுரி மற்றும் பெல்மதுல்ல வரை இந்த அதிவேக நெடுஞ்சாலை நீடிக்கப்படும்.

ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்தல், செலவை குறைத்தல், நேர வீண்விரயத்தை குறைத்தல், தேயிலை, ஆடை, சிறு ஏற்றுமதி பயிர் மற்றும் இரத்தினக்கல் சந்தை மற்றும் விநியோக இடங்களுக்கான அணுகலை எளிதாக்கல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்பார்க்கப்படும் அனுகூலங்கள் பலவாகும்.

ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சப்ரகமுவ மாகாண மக்களுக்கு மிகவும் அண்மித்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் தற்போது ஆரம்பிப்பது இலங்கையின் ஏழாவது அதிவேக நெடுஞ்சாலையாகும். அன்று அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப காலப்பகுதி முதல் சப்ரகமுவ மாகாணத்தின் எமது அன்பார்ந்த மக்கள் இரத்தினபுரிக்கு அதிவேக நெடுஞ்சாலையொன்றை எப்போது நிர்மாணிப்பீர்கள் என எம்மிடம் கேட்டிருந்தமை எனக்கு நினைவிருக்கிறது.

அது தொடர்பில் கவனம் செலுத்தி, ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் கடந்த 2014ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டிருந்தோம்.

அன்று நாம் அதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவுசெய்திருந்தோம். எனினும் அதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தலில் தோல்வியடைந்து நாம் வீடு செல்ல நேர்ந்தது.

அன்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியை நாம் விட்டு சென்ற இடத்திலிருந்து ஆரம்பித்து முன்னெடுத்து செல்லும் என எண்ணினோம்.

ஆனால் அவர்களுக்கு அதிகாரத்தை பறித்தெடுக்கும் தேவை மாத்திரமே இருந்ததே தவிர நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை இல்லை. அதனால் நாம் ஆரம்பித்திருந்த அனைத்தும் கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது.

அது மாத்திரமன்றி நாம் செய்தவைக்காக எம்மை பழிவாங்கினர். நீதிமன்றம் மற்றும் ஆணைக்குழுக்களின் முன் எம்மை கொண்டு நிறுத்தினர்.

தேசிய பாதுகாப்பும், பொருளாதாரமும் பூச்சியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டையே நாம் மீண்டும் பொறுப்பேற்றோம். எனினும் அந்த சவாலை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.

நாட்டை அபிவிருத்தி செய்தல், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல் போன்று இந்நாட்டு மக்களுக்கு எப்போதும் சிறந்ததை வழங்குவதே எமது தேவையாக காணப்பட்டது.

அதனால் எத்தகைய தடைகள் நேரிடினும், எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேனும் நாம் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்வைத்த கொள்கைகள் யதார்த்தமாகும் வரை அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இன்று ஆரம்பிக்கப்படும் ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான முதல் கட்டத்தை இரண்டரை வருடங்களுக்குள் நிறைவு செய்வோம் என எமது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என்னிடம் குறிப்பிட்டனர்.

அவர்கள் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்நெடுஞ்சாலையின் 24 கிலோமீற்றர் வரையான முதல் கட்டத்திற்காக ரூபாய் 54.7 பில்லியன் தேசிய நிதியை அரசு செலவிடுகிறது. இதன் கட்டுமானப் பணிகளை உள்ளூர் நிறுவனமொன்றே பொறுப்பேற்றுள்ளது.

முதல் கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் இங்கிரிய முதல் இரத்தினபுரி வரையான இரண்டாம் கட்டம் மற்றும் இரத்தினபுரி முதல் பெல்மதுல்ல வரையான மூன்றாம் கட்டம் என ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

அதிவேக நெடுஞ்சாலைகளே இந்நாட்டில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான திட்டமாகும். ஆனால் அவ்வாறு விமர்சித்தவர்கள் இன்று அந்த அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலமான வசதிகளை அனுபவித்து பயணித்து வருகின்றனர். நாம் அது குறித்து பெருமையடைகிறோம்.

தற்போது மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீரிகம முதல் பொதுஹெர வரையான பகுதியை வெகுவிரைவில் மக்களின் பாவனைக்காக திறந்துவைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அது குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் என நினைக்கின்றோம். அதேபோன்று பொதுஹெர முதல் கலகெதர வரையான பகுதியின் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே ஆரம்பித்தோம். இன்று நமது நாடு மட்டுமின்றி முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சவால் மிகுந்த ஒரு தருணத்திலேயே ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கி நமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோன்று எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் அபிவிருத்தியை நாம் கைவிட்டதில்லை. கைவிடப் போவதும் இல்லை.

ஒரு சிறந்த சாலை அமைப்பு என்பது நாட்டின் அபிவிருத்தியை மதிப்பிடும் ஒரு காரணி என்றே நான் நம்புகின்றேன். மஹிந்த சிந்தனையில் போன்றே சுபீட்சத்தின் நோக்கிலும் நாம் அது குறித்து தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

தற்போது முழு உலகமும் கொவிட் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. கொவிட் தொற்று காரணமாக நமக்கு நாட்டை முடக்க முடியாது. வைரஸிற்கு எதிராக போராடும் அதேவேளை நாட்டு மக்களின் பொருளாதார நிலை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவார்களாயின் இந்நிலையை கட்டுப்படுத்துவது அவ்வளது கடினமானதாக அமையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் சுகாதார பிரிவினரால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாம் ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம். உங்கள் அனைவரும் சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்றே ஜனாதிபதிக்கும் இத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆலோசனை வழங்கினார். நாம் பல சவால்களுக்கு முகங்கொடுப்பவர்கள் ஆவர். இலங்கைக்கு மாத்திரம் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி எண்ணுகின்றது. இன்றேல், ஏன் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதனால் கொவிட் தொற்று ஏற்பட்டது போன்று பிரசாரம் செய்கின்றனர்.

இவ்வாறு எத்தனை சவால்கள் ஏற்படினும் நமது நாட்டின் அபிவிருத்தியை நாம் பின்னோக்கி நகர்த்தமாட்டோம். ஒரு நாள் நாம் நிறுத்துகின்றோம் எனின், ஒரு நாளினால் நாம் பின்னோக்கி நகர்வோம். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்து யுத்தத்தை நிறைவுசெய்து அன்று ஒரு வேலைத்தளமாகக் காணப்பட்ட நாட்டை கடந்த அரசாங்கம் ஒரு தரிசு நிலமாக மாற்றியது.

அவ்வாறு தரிசு நிலமாக்கப்பட்டதை மீண்டும் வேலைத்தளமாக மாற்றுவதற்கே நாம் முயற்சித்து வருகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன் நாம் பாதுகாப்பாக இருப்பதாக தோன்றியது. எமது ஜனாதிபதி போன்றே பிரதமரும் மிகவும் திறமையாக நாட்டை வழிநடத்தி நிலையான பொருளாதாரத்தை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். மக்கள் அன்று எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது கொண்ட நம்பிக்கைக்கு தீங்கு ஏற்படும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் அரசு முன்னெடுக்காது.

இந்த அதிவேக நெடுஞ்நாலை இரத்தினபுரி மக்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் முக்கியமானதாகும்.

கண்டி அதிவேக நெடுஞ்சாலையை துரிதமாக நிறைவுசெய்யுமாறு பிரதமர் அடிக்கடி எமக்கு ஆலோசனை வழங்குவார். தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு கூறுவார். அப்பணியை நாம் துரிதமாக முன்னெடுத்து வருகிறோம்.

கடந்த அரசாங்கம் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கட்டுமானத்தின் ஒரு பகுதியை அந்த அரசாங்கத்தின் அமைச்சருக்கு வழங்கியது. அவர்கள் ஹெலிகொப்டர்களை பெற்றுக்கொண்டனர். அந்த ஹெலிகொப்டர்களில் பணித்தவர்கள் இன்று எம்மை சாடுகின்றனர்.

ஆனால் அதிவேக நெடுஞ்சாலை பகுதியின் பணிகளை நிறைவுசெய்யவில்லை. அதிவேக நெடுஞ்சாலைகளில் தங்கமா போடப்படுகிறது என எம்மிடம் கேள்வி எழுப்பியவர்கள் செய்தது என்னவென்றால் வெளிப்புற சுற்றுவட்ட நெடுஞ்சாலையில் இரு பாதைகளை குறைத்து, எமது மதிப்பீட்டிற்கே ஒப்பந்தம் வழங்கி அதன் மூலமும் சுரண்டியது மாத்திரமே என அமைச்சர் குறிப்பிட்டார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, இன்று இரத்தினபுரி மக்களுக்கு விசேடமானதொரு தினமாகும். பல ஆண்டுகளாக காத்திருந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் இன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

அனைத்து நிதியையும் கொவிட்டிற்கு ஒதுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் குறிப்பிட்டார். எனினும், ஒரு விடயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிறிதொரு விடயத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதை கூட அவர் அறிந்திராமை குறித்து நான் வேதனையடைகிறேன்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை பெல்மதுல்ல வரை 2024ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்யப்படும் என நம்புகின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளிவ்ஆர்.பிரேமசிறி, பெல்மதுல்ல வரையான கட்டுமானத்தை தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே நிறைவுசெய்ய எதிர்பார்க்கின்றோம்.

இந்த நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ஒரு உள்ளூர் நிறுவனத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது. திட்டமிடல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட பொறியியலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் கட்டுமானப் பணிகள் இலங்கையின் பாரிய கட்டுமான நிறுவனமான மாகா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், மேற்பார்வை நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே மஹிந்த சிந்தனையின் கீழ் இந்த நாட்டில் நெடுஞ்சாலைகளின் முன்னோடியாக இருந்தார். அதனால் எமக்கும் அதில் பங்குகொள்ள வாய்ப்பு கிடைத்தது என கூறினார்.

Previous articleநேற்றய தினம் பதிவான இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு!
Next articleவடக்கில் மேலும் 20 பேருக்குக் கொரோனா தொற்று!