மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி – 12 கிராம சேவையாளர் பிரிவில் கோவிட் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருமண்வெளி – 12 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த 61 வயதான கந்தப்பன் யோகராஜா திடீர் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட றபிட் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில்,சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வியாழக்கிழமை(06) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வெள்ளிக்கிழமை(07) கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ,சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி – 12 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பாலர் பாடசாலையில் வீதி, மற்றும் அதனை அண்டியுள்ள குறுக்கு வீதிகள், அனைத்தும் முற்றாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதி மக்கள் வெளியே நடமாட பொது சுகாதாரத் துறையினர் தடை விதித்துள்ளதுடன், அப்பகுதியில் சுகாதார பரிசோதகர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் இணைந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.