ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி இல்லையேல் பகிஸ்பரிப்பு – மிரட்டும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தனியார் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த வாரம் முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொவிட் அச்சறுத்தலுக்கு மத்தியிலும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ் சாரதிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தும், அரசாங்கம் தவறி இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தடுப்பூசி தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் வழங்கவேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு பதிவுத்தபால் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் பிரதி ஒன்றை போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவுக்கும் பெற்றுக்கொடுத்திருந்தோம். ஆனால் எமது கோரிக்கைக்கு சுகாதார பணிப்பாளரிடமிருந்தோ அல்லது அமைச்சர் காமினி லொக்குகேயிடமிருந்தோ இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அதனால் இந்த வாரத்தில் எமது தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் பஸ்கள் கஷ்டத்துடனேனும் போக்குரவத்து சேவையில் ஈடுபடும். இவ்வாறு போக்குவரத்து சேவையில் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே ஈடுபடுகி்ன்றனர். இவ்வாறு போக்குவரத்து சேவையில் ஈடுபவர்களுக்கு இந்த வாரத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு தடுப்பூசி ஏற்றுவதற்கு தவறும் பட்சத்தில் பஸ் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டி ஏற்படும். அதனால் அரசாங்கம் ஒருவாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி வழங்குவதறகு தவறினால் அடுத்த வாரத்தில் இருந்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் பொது மக்கள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்திருக்கின்றது என்றார்.

Previous articleஇன்ரேம் வரைக்கும் 2659 பேர் கொரொனா தொற்று அடையாளம் காணப்பட்டனர்!
Next articleமட்டக்களப்பில் காணாமல் போனவர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு!