கடந்த ஞாயிறன்று Bloor-Yonge ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரின் புகைப்படம் வெளியிட்டு, அடையாளம் காண கோரியுள்ளனர் ரொறன்ரோ பொலிசார்.
குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,
குறித்த 17 வயது சிறுவன் TTC ரயில் நிலையத்தில் அதிகாலை 2 மணிக்கு முன்பு புறப்பட காத்திருந்ததாகவும், அப்போது ஒரு பெண் மற்றும் ஆணுடன் அந்த சிறுவன் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் திடீரென்று கத்தியை உருவிய அந்த பெண் சிறுவனின் கையை கிழித்துள்ளார், அதே வேளை அந்த ஆணும் கத்தியை உருவி சிறுவனின் கழுத்தை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அந்த இருவரும் மேற்கு நோக்கி செல்லும் ரயிலில் தப்பியுள்ளனர். இந்த நிலையில் குறித்த சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை பொலிசார் தொடர்புடைய பெண்ணின் கமெரா புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட அவர் பருமனான உடலமைப்பு கொண்டவர் எனவும், நீளமான பழுப்பு நிற கூந்தலுடன் காணப்பட்டார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.