நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபா வழங்குங்கள் – மனோ கணேசன் அதிரடி

நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபா வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவரை ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று, நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து முடியும் நிலைமை ஏற்படலாம்.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த முன்னணி பிக்கு முருத்தெடுகல ஆனந்த தேரர், “நாட்டில் வீதியில் விழுந்து மரணிக்க மட்டுமே மக்களுக்கு இன்று உரிமை உள்ளது” என கூறுகிறார். இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் இவரும் இந்நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டும். எனினும், இதைவிட இந்த ஆட்சியின் இலட்சணத்துக்கு சான்றிதழ் வேண்டுமா?

ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது. இன்று கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால், இன்று நாட்டில் உள்ள கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது.

இன்று எம் நாட்டில் சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வளர்ச்சியடைந்த கொரோனா கிருமிகள் உள்ளன. இவை எப்படி இலங்கைக்கு வந்தன? அரசின் கையாள் உதயாங்க வீரதுங்க கூட்டி வந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள்தான் தம்முடன் இங்கிலாந்து கிருமிகளையும் கொண்டு வந்தார்கள். இப்படிதான் எல்லாம் வந்தன. நீங்கள் உரிய வேளையில் விமான நிலையங்களை மூட மறுக்கிறீர்கள்.

இன்று நாட்டில் ஒரு நாளைக்கு 2600 நோயாளிகள். நேற்று 22 பேர் இறந்தார்கள். இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இவற்றை தவிர இன்னமும் உள்ளனவா என் தேடிப்பார்க்க வேண்டும்.

நாட்டை மூட நீங்கள் மறுப்பது ஏன்? இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் “பாஸ்” செய்துக்கொள்ள பார்க்கிறீர்கள். அதுதான் தேவை என்றால், நாட்டை மூடி, பாராளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள்.

அடுத்தது, உங்களால், நாட்டை மூடி விட்டு, மக்களுக்கு நிவாரணம் தொகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்க வேண்டும். பணம் இல்லை. ஆனால், சீனி வரி குறைப்பால் திறைசேரிக்கு வராத நிதி உண்மையில் எங்கே போனது? அந்த தொகை ரூ. 1600 கோடி. அதில் எத்தனை குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்கலாம்?

நாட்டை மூடினால், நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுங்கள். எப்படியோ எல்லா அபிவிருத்தி திட்டங்கள், புதிய வீதிகள், புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடை நிறுத்தி வைத்து விட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ. 20,000 வழங்குங்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவிக்கு வந்த உடன், அவர் இந்திய பிரதமர் மோடியின் வழியில் போகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது பார்த்தால் அது சரிபோல் தெரிகிறது.

பிரதமர் மோடி, அவரது குஜராத் ஊரில் ஸ்டேடியம் கட்டி, அங்கே 125,000 பேரை கூட்டி, இந்திய – இங்கிலாந்து கிரிகட் மேளா நடத்தினார். பின், உத்தரகாண்டில் 90 இலட்சம் பேரை கூட்டி கும்பமேளா என்ற மதவிழாவை நடத்தினார். பின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் மேளா நடத்தினார். அப்போது ஒரு நாளைக்கு இந்தியாவில், 20,000 பேர்தான் கொரோனா நோயாளிகளாக இருந்தார்கள். இவருக்கு பிறகு இப்போது அது ஒரு நாளைக்கு நான்கு இலட்சத்தை தாண்டி விட்டது. இறப்பும் கூடி விட்டது.

அதுபோல் நம்ம ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இப்போது குட்டி மோடி ஆகி விட்டார். கோட்டாபய ராஜபக்ஷ, நரேந்திர மோடியின் பெரிய தம்பி என்றால், கோதாவின் சிஷ்ய பிள்ளை கெஸ்பாவையின் காமினி லொகுகே, சின்ன தம்பி ஆகியுள்ளார்.

Previous articleதிருகோணமலையில் இளம் நபரொருவர் கொரானாவுக்கு பலி!
Next articleகொரோனா வைரஸால் பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமானார்!