ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மசூதியின் இமாம் முஃதி நய்மான் உட்பட 12பேர் உயிரிழந்துள்ளதோடு 15பேர் காயமடைந்துள்ளனர்.

காபூலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை தொடங்கிய உடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் ஃபிர்தாஸ் ஃபராமர்ஸ் தெரிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஸான் பண்டிகையையொட்டி தலிபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் 3 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை கடைப்பிடித்து வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் காலை அங்கு அமுலுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மசூதியின் பிரார்த்தனை மேடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மசூதியின் இமாமைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசாங்கத்துக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இருதரப்புக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.

இதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி பல மாதங்கள் இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த அமைதி பேச்சுவார்த்தை முடிந்தது.

இதற்கிடையில் தலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படையை முழுமையாக திரும்பப் பெறும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

Previous articleமரணித்த உறவுகளை நினைவு கூர்வதற்கே போராட வேண்டிய நிலையில் தமிழர்கள்!
Next articleதிருகோணமலையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இரகசியமாக புதைக்கப்பட்டதா?