தமிழ் பெரும்பரப்பு ஒன்றிணைந்து மே-18ஐ எப்படி நினைவுகூர்வது?

மே-18ஐ இம்முறையும் நினைவு கூர்வதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சுருங்கியே காணப்படுகின்றன. கடந்த ஆண்டும் அரசாங்கம் நினைவுகூர்தலை பெருந்தொற்று நோயைக் காரணமாகக் காட்டித் தடுத்தது. இந்த ஆண்டும் அதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குறிப்பாக அண்மைய வாரங்களில் பெருந்தொற்று நோயின் வீரியம் அதிகமாக உணரப்படும் ஒரு மருத்துவ அரசியல் பின்னணியில் அரசாங்கம் நினைவுகூர்தலைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் குறிப்பாக மே தின ஊர்வலங்களைப் பெரும்பாலான கட்சிகள் இரத்துச் செய்திருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களைக் காரணமாக காட்டி மே-18ஐ நினைவுகூர்வதைத் தடுக்கும் வாய்ப்புக்களே அதிகம்.

எனவே, இதுவிடயத்தில் தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் சம்பந்தப்பட்ட தரப்புக்களும் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வரவேண்டும். பௌதீக நினைவுகூர்தலுக்கு இம்முறையும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்றால் வேறு எந்த வழிகளில் நினைவுகூர்தலை அனுஷ்டிப்பது?இரண்டு வழிகள் உண்டு.

Advertisement

முதலாவது, மெய்நிகர் பரப்பில் நினைவு கூர்வது. இரண்டாவது நினைவு கூர்தலை ஆகக்கூடியபட்சம் மக்கள் மயப்படுத்துவது. அதாவது, நினைவு கூர்தலை ஆகக் கூடிய பட்சம் எல்லா தமிழ் வீடுகளுக்கும் பரவலாக்குவது.

இதில் முதலாவதைப் பார்க்கலாம், ஏற்கனவே கடந்த ஆண்டும் மெய்நிகர் வெளியில் எப்படி நினைவு கூரலாம் என்று சிந்திக்கப்பட்டது. குறிப்பாகப் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் அவ்வாறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. வெவ்வேறு நேர வலையங்களுக்குள் வாழும் தமிழ் சமூகங்களை எப்படி ஒரு ஆகக்கூடியபட்சம் பொதுநேரத்தில் ஒருங்கிணைப்பது என்று யார் சிந்திப்பது?

உலகு தழுவிய மெய்நிகர் நினைவுகூர்தல் ஒன்றைக் கடந்த ஆண்டிலும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. இந்த ஆண்டாவது ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று யாராவது முன்கூட்டியே சிந்தித்திருக்கிறார்களா? இல்லையென்றால் ஏன் சிந்திக்கவில்லை?

ஏனென்றால், முழு உலகுதழுவிய நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு இன்றுவரை உருவாக்கப்படவில்லை. ஏன் முழு உலகுதழுவிய ஒரு ஏற்பாட்டுக்குழு தேவை?

ஏனென்றால், நவீன தமிழ் பரப்பில் இதுவரையிலும் நிகழ்ந்த மிகப்பெரிய அழிவு 2009ஆம் ஆண்டின் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களிலும் நிகழ்ந்த அழிவுதான். பெருந்தமிழ் பரப்பில் அவ்வாறு ஒரு பேரழிவு இதற்குமுன்பு ஏற்பட்டிருக்கவில்லை.

எனவே, முழுப் பெருந்தமிழ் பரப்பையும் ஓருணர்ச்சிப் புள்ளியில் இணைக்கும் நாளாக மே-18 காணப்படுகிறது. தமிழ் ஐக்கியத்தை பெருந்தமிழ் பரப்பில் கட்டியெழுப்ப அது உதவும். ஈழத் தமிழர்கள் தங்களுக்குரிய நீதியைப் பெறுவதற்கான போராட்டங்களை முழுத்தமிழ் பரப்புக்கும் விரிவுபடுத்த அந்த உணர்ச்சிகரமான அடித்தளம் மிக அவசியம்.

நினைவு கூர்தல் எனப்படுவது கூட்டாக துக்கிப்பது மட்டுமல்ல. கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆவேசமாகவும் கூட்டு ஆக்க சக்தியாகவும் மாற்றுவதாவுகும்.

ஈழத்தமிழர்கள் ஒரு மிகச்சிறிய இனம். எனவே, தமது கூட்டுத் துக்கத்தைக் கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவதற்கு தமிழகத்தையும் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தையும் முழுப் பெருந்தமிழ் பரப்பையும் ஒன்றிணைக்க வேண்டும். எனவே, நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக் குழு உலகளவில் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால், அப்படியொரு ஏற்பாட்டுக் குழு இன்றுவரையிலும் இல்லை. தாயகத்தில் ஒரு பொதுக்கட்டமைப்பு இயங்குகிறது. ஆனால், அது அனைத்துலக மயப்பட்டதாகத் தெரியவில்லை. சில கிழமைகளுக்கு முன்பு அந்தப் பொது ஏற்பாட்டுக்குழு ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அதற்குப்பின்னர் நினைவுகூர்தலை மெய்நிகர் வெளியிலோ அல்லது பௌதீக வெளியிலோ மக்கள் மயப்படுத்தும் கட்டமைப்புக்கள் எதுவும் இதுவரையிலும் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மெய்நிகர் வெளியில் ஓர் உணர்ச்சிப் புள்ளியில் பெருந்தமிழ் பரப்பை இணைப்பதற்கு மே-18 உதவும். அதை அதற்குரிய உலகளாவிய பரிணாமத்தோடு விளங்கி ஒரு ஏற்பாட்டுக் குழுவை இன்றுவரையிலும் உருவாக்க முடியவில்லை. இந்த முறையும் அவ்வாறு ஒரு மெய்நிகர் வெளியில் முழுப் பெருந்தமிழ் பரப்பையும் இணைக்க முடியுமா என்று தெரியவில்லை.

இரண்டாவது, தாயகத்திலும் ஏனைய தமிழ் பரப்புக்களிலும் நினைவுகூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்பது. சில மாதங்களுக்கு முன்பு யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்ட போது எனது நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்,

தூலமான பௌதீகமான நினைவுச் சின்னங்கள் எல்லாவற்றையும் கடந்து தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்கிற அழிக்கப்படவியலாத ஒரு நினைவுகூர்தலுக்கு வந்துவிட்டார்கள். உணவையே நினைவுகூரும் ஒரு அம்சமாக மாற்றியிருக்கிறார்கள். இதுவொவரு அற்புதமான வளர்ச்சி. இதை யாரும் தடுக்க முடியாது. இதையே நாங்கள் மேலும் பரவலாக்கலாம் என்று.

மேலும், அவர் ஒரு விடயத்தச் சுட்டிக்காட்டினார், சில நூற்றாண்டுகளுக்கு முன் அந்நியர் நமது சமூகத்தை ஆக்கிரமித்திருந்த காலகட்டங்களில் தமிழ் மக்கள் தமது மத அனுஷ்டானங்களை எப்படி இரகசியமாக அனுஷ்டித்தார்களோ அதேபோல இப்பொழுதும் பெருந்தொற்று நோய்க் காலத்திலும் அரசியல் நெருக்கடிகள் மிகுந்த காலத்திலும் நினைவுகூர்தலை அவரவர் வீடுகளில் அனுஷ்டிக்கலாம்தானே என்று.

உண்மை. அந்நிய ஆக்கிரமிப்புக்களின்போது தமிழ் மக்கள் விரதம் இருந்த பின் வாழை இலைகளைச் சுருட்டி தமது கூரைகளில் செருகி வைப்பார்கள். ஏனென்றால், வாழை இலைகளை வைத்து அவர்கள் விரதமிருந்திருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்படும். அதனால், அவர்கள் தண்டிக்கப்படக்கூடும். அதைத் தவிர்ப்பதற்கு வாழை இலைகளைக் கிடுகு கூரைகளில் செருகி வைக்கும் ஒரு வழமை இருந்தது.

அது இப்போதும் கிராமப்புறங்களில் விரத காலங்களில் பின்பற்றப்படுகிறது. தமது மத நம்பிக்கைகளை வெளிப்படையாக அனுஷ்டிக்க முடியாத ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்கள் அதை இரகசியமாகவும் மக்கள் மயப்பட்ட விதங்களிலும் அனுஷ்டித்த சில நூற்றாண்டுகளுக்கு முந்திய உதாரணம் அது. அதையே பின்பற்றலாம். ஆனால், அதற்கு நினைவுகூர்தலை ஆகக்கூடியபட்சம் மக்கள் மயப்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்வது? யார் செய்வது? இதுதான் பிரச்சினை.

2009இற்குப் பின்னரான தமிழ் அரசியலில் நினைவுகூர்தலில் உள்ள அனைத்துலக பரிமாணங்களை விளங்கிக்கொண்டு அதை எப்படி மக்கள் மயப்படுத்தலாம், எப்படி அனைத்துலக மயப்படுத்தலாம் என்பவற்றுக்குரிய புதிய உபாயங்களை, உத்திகளைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு கத்தோலிக்க மதகுரு கூறுவதுபோல, உணவை ஆயுதமாகப் பயன்படுத்திய ஒரு போர்க்களத்தில் உணவையே நினைவு கூர்தலுக்கான ஒரு கருவியாக எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.

ஆடி அமாவாசை, சித்திரா பௌர்ணமி போன்ற நாட்களை எவ்வாறு இந்துக்கள் அனுஷ்டிக்கிறார்களோ அனைத்து மரித்தோர் தினத்தை எவ்வாறு கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ அவ்வாறே மே-18ஐயும் ஒரு மக்கள் மயப்பட்ட அனுஷ்டானமாக மாற்றலாம்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டும் சிந்திக்கப்பட்டது .இது தொடர்பாக கடந்த ஆண்டும் நான் கட்டுரைகளை எழுதினேன். குறைந்தபட்சம் எல்லா ஆலயங்களிலும் ஒரேநேரத்தில் மணிகளை ஒலிக்கச் செய்யலாம் என்று கடந்த ஆண்டும் சிந்திக்கப்பட்டது. ஆனால், அதை மக்கள் மயப்படுத்த எந்தவோர் அமைப்பும் இருக்கவில்லை. சில செயற்பாட்டாளர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மத நிறுவனங்களின் தலைவர்களை அணுகி ஒரு பொது நேரத்தில் ஆலயங்களில் மணிகளை ஒலிக்கலாமா என்று முயற்சித்தார்கள். பெரும்பாலான மதத் தலைவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

யாழ். சர்வமதப் பேரவை அதுதொடர்பாக ஒரு அறிக்கையும் விட்டது. எனினும், மிகச்சில ஆலயங்களில்தான் சுட்டிகள் ஏற்றப்பட்டு மணிகள் ஒலிக்கப்பட்டன. ஏனைய பெரும்பாலான ஆலயங்களில் மணிகள் மௌனமாக இருந்தன. ஒரு சுட்டிகூட ஏற்றப்படவில்லை. அந்நாட்களில் இரவு எட்டு மணிக்குப்பின்னர் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.

பரீட்சை காலங்களில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு மாணவர்களைக் குழப்பும் ஆலயங்கள் இதுவிடயத்தில் தாமாக எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் நிலையில் இல்லை. அதேசமயம், மத அமைப்புகளும் தலையிட்டு இதை ஒழுங்குபடுத்தும் நிலையில் இல்லை. இப்போதுள்ள பொது ஏற்பாட்டுக் குழுவும் அதை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை.

கடந்த ஆண்டைப் போலன்றி இந்த ஆண்டாவது ஒரு பொதுவான நேரத்தில் ஆலயங்களில் மணிகளை ஒலிப்பதற்கும் சுடர்களை ஏற்றுவதற்கும் ஏதாவது ஏற்பாடுகள் உண்டா? அல்லது இம்முறையும் மக்கள் மயப்படாத ஒரு நினைவு கூர்தல்தானா?

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்