யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் இராணுவத்துடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபடும் சிவாஜிலிங்கம்!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தடுத்து நிறுத்திய யாழ்ப்பாண பொலிஸார் அவரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

இதனையடுத்து சிவாஜிலிங்கம் கடுமையாக பொலிஸாருடன் வாதிட்டமையால் அந்தப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. அதன் பின்னர் தனது அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அவரை யாழ்ப்பாண பொலிஸார் இடைமறித்து வாக்குமூலம் பதிவுசெய்து விடுவித்துள்ளனர்.

அடையாள அட்டை இலக்கத்தினடிப்படையில் சிவாஜிலிங்கம் வெளியே நடமாட முடியாது என்று தெரிவித்து அவரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

அதற்கு சிவாஜிலிங்கம்,நான் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காகச் சென்று இன்றைய தினமே இங்கு வந்துள்ளேன். அதனால் நீங்கள் அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் என்னைக் கைது செய்யமுடியாது என கூறியுள்ளார்.

அதன் பின்னர் சிவாஜிலிங்கத்திடமும், அவரது சாரதியிடமும் வாக்குமூலம் பெற்று அவர் செல்வதற்கு அனுமதியளித்துள்ளனர். அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரவித்த சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நான் எனது அலுவலகமான எனது வீட்டு முன்றலில் மாலை 6 மணிக்குச் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களுடனும் பொலிஸார் முரண்படும் தொனியில் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇவர் தொடர்பில் துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு!
Next articleகொரோனா நோயாளர்களால் நிரம்பிவழியும் குருநாகல் மருத்துவமனை!