துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 50 பேர் பலி!

துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 50 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 33 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இந்த நிலையில் லிபியாவில் துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து சுமார் 90 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.‌

இந்தப் படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஸ்பாக்ஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் துனிசியா கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

எனினும் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 50 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் நேரில் தத்தளித்துக்கொண்டிருந்த 33 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் மேலும் 7 பேர் மாயமாகி உள்ளனர்.‌ ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று மத்திய தரைக்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான பயணங்களின் போது ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகனடாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
Next articleஇலங்கையில் ஒரேநாளில் பதிவாகிய அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் – மொத்த எண்ணிக்கை 150,000 ஆக உயர்வு