நோயாளர் காவுவண்டி இருக்கு சாரதி இல்லை – நெடுந்தீவில் வைத்தியசாலையை சுற்றி வளைத்த மக்கள்

நெடுந்தீவில் பனையிலிருந்து விழுந்து கை உடைந்த தொழிலாளியை ஏற்றிச் செல்ல நோயாளர் காவு வண்டியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வைத்தியசாலையில் திரண்ட மக்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் இடையில் இன்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவு 7ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த நிர்மலதாசன் பிரியங்கன் என்ற தொழிலாளி பனை மரத்திலிருந்து தவறி வீழ்ந்ததால் அவருடைய கை முறிந்துள்ளது.

அவரை அழைத்துச் செல்வதற்காக நோயாளர் காவு வண்டியை அனுப்புமாறு மக்கள் வைத்தியசாலை நிர்வாகத்தைக் கோரியிருக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த வைத்தியசாலை நிர்வாகம், சாரதி தனிமைப்படுத்தலில் உள்ளமையால் நோயாளர் காவு வண்டியை அனுப்பமுடியாது என்று தெரிவித்திருக்கின்றது.

சம்பவத்தை அடுத்து முச்சக்கரவண்டி ஒன்றின் மூலமே படகுத்துறை வரையில் காயமடைந்தவர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.

சம்பவத்தை அடுத்து கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு வைத்தியசாலைக்குச் சென்று,

சாரதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் மாற்றீடாக இன்னொரு சாரதியை நியமிக்கலாம் தானே? என்று கேள்வி எழுப்பியபோது, அதற்கு “நீங்கள் மாற்றுச் சாரதியை ஏற்பாடு செய்து தாருங்கள், நீங்கள் கற்றுவிட்டு வைத்தியராகி வாருங்கள்” என்று நிர்வாகம் பதிலளித்ததாக மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சாரதி மக்கள் மத்தியில் கடற்கரையில் நடமாடுவதை தாம் அவதானித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மிகுந்த நெருக்கடியான காலத்தில் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றும் மருத்துவத் துறையில் இவ்வாறான சில கசப்பான சம்பவங்கள் நிகழ்வது ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்தையும் சங்கடப்படுத்தும் செயல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Previous articleகொரோனாவில் இறந்த தந்தையின் உடலை வேண்டாம் என்று கூறிய மகள்!
Next articleஇன்றைய தினம் அரச அலுவலகங்கள் குறைந்தளவு ஊழியர்களுடன் திறக்கப்படும்!