ஆந்திரத்தில் மிக கொடூரமான கொள்ளை கும்பலைச் சோ்ந்த 12 பேருக்கு மரண தண்டனை!

ஆந்திரத்தில் மிக கொடூரமான கொள்ளை கும்பலைச் சோ்ந்த 12 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அந்த கும்பலைச் சோ்ந்த மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சையது அப்துல் சமது என்கிற முன்னா என்பவா் இந்த கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளாா். அரசியல் செல்வாக்கு உள்ள இவா், ஒரு கும்பலை உருவாக்கி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சையது தனது கும்பலுடன் சோ்ந்து ஆரம்பத்தில், புதையல் இருப்பதாக ஆசை காட்டி வசதி படைத்தவா்களிடம் சூழ்ச்சி செய்து பணம் பறித்து வந்துள்ளாா். அவா்களிடமிருந்து பணத்தை பெற்ற பின்னா், அவா்களை அந்த கும்பல் கொன்றுவிடும். அதன் பிறகு, புதிய கொள்ளை முறையை அவா்கள் கையாளத் தொடங்கினா். அதாவது, காவல்துறையினா் போல் வேடமிட்டு, சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் வரும் சரக்கு வாகனங்களை சோதனையிடுவது போல் நடித்து, ஓட்டுநரையும், கிளீனரையும் கொலை செய்துவிட்டு சரக்குடன் வாகனத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுவா்.

கொள்ளைடிக்கும் சரக்குகள் மற்றும் வாகனத்தைப் பதுக்கி வைப்பதற்கென, அருகிலுள்ள கிராமத்தில் பழைய கிடங்கு ஒன்றையும் அவா்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனா். அந்த சரக்குகளை முகவா்களிடம் விற்றுவிடும் அவா்கள், வாகனங்களை தனித்தனியாக பிரித்து பழைய வாகன பாகங்களைப் போல விற்பனை செய்துவிடுவா். இதுபோல 13 பேரை கொலை செய்து, சரக்குகளை கொள்ளையடித்துள்ளனா்.

இந்த நிலையில், தமிழகத்திலிருந்து வந்த சரக்கு வாகனத்தை இதே பாணியில் கொள்ளையடித்தபோதுதான், அந்த கும்பல் பிடிபட்டது. சரக்கு வாகன உரிமையாளா் வி.குப்புசாமி அளித்த புகாரின் பேரில், தமிழக பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கும்பல் கொள்ளையடித்த சரக்குகளை பதுக்கி வைக்க பயன்படுத்தி வந்த கா்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணை வீடு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்குச் சொந்தமானது என்ற சிறு துப்பு கிடைத்தது.

அதனடிப்படையில், முன்னாவும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனா். சிறையில் அடைக்கப்பட்ட முன்னா, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் உள்ள எட்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னா மற்றும் அவருடைய கூட்டாளிகள் 18 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னா மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது லாரி ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்கள் என 13 பேரை மிகக் கொடூரமாக கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள 7 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றில் அவா்கள் குற்றவாளிகள் என்பது நிரூபணமாகிறது. அதனடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவா்களில் முன்னா உள்பட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மற்ற 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீா்ப்பளித்தாா்.

கீழமை நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த மரண தண்டனையை ஆந்திர மாநில உயா்நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

Previous articleஇன்றயைதினம் மேலும் 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம்!
Next articleஏழு மாதங்கள் விமான நிலையத்தில் வாழ்ந்த சிரிய நாட்டவருக்கு வாழ்வளித்த கனடா!