இலங்கையின் பல பகுதிகளில் மின்சார தடை!

இலங்கையில் நிலவும் மழை – காற்றுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் தொலைபேசி நிலையத்திற்கு மணித்தியாலத்திற்கு 5000 அழைப்புகள் வருவதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவ்வாறு வரும் தொலைபேசி அழைப்புகளில் 1000 அழைப்புகள் வரையில் பதிலளிக்கும் கடினமாக நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாய் சூறாவளி பாதிப்பு காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் கடுமையான மழையுடன் கூடிய காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் நாட்டின் பல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 76000 வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளது. கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வழமைக்கு கொண்டுவருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக தாமதம் ஏற்படுவதாக மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளுக்கமைய கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.