தமிழர் பிரதேசத்தில் சட்டவிரோத வெடிமருந்துகள் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் இறக்கக்கண்டி பிரதேசத்தில் நேற்றிரவு (26)  சட்டவிரோத வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இன்று (27) அதிகாலை விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் இருவர் கைதுசெய்யப்பட்டு, குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத வெடிமருந்துகளை  வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, அங்கு விரைந்து சந்தேகநபர்களின் வீடுகளைச் சோதனையிட்டபோது, 85 ஜெலட்னைட்  கூறுகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், இறக்கக்கண்டி, வாலையூற்று பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 38 வயதுகளையுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த வெடிமருந்துகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட இருந்ததாக பொலிஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.