வவுனியாவில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி!

வவுனியாவில் முககவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டு தொற்றாளராக இனங்காணப்பட்டவருடன் தொடர்பை பேணிய 5 பேர் உட்பட 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (27.05) இரவு வெளியாகின.

அதில், பயணக்கட்டுப்பாடு தளர்வின் போது வவுனியா ஹொரவப் பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சீராக முககவசம் அணியாமையால் கைது செய்யப்பட்ட நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பை பேணிய குறித்த வர்த்தக நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கும், நந்திமித்திரகம பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் ராணிமில் வீதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதிகள் இருவருக்கும், வவுனியா பொலிசார் ஒருவருக்கும், கோவில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வத்தக நிலையம் ஒன்றில் ஒருவருக்கும் என 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு தளர்வின் போது முககவசம் சீராக அணியாத நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் இஸ்லாமிய கலாசார மண்டபம் முன்பாகவுள்ள பல்பொருள் வியாபார நிலையத்தில் கடமையாற்றிய போது கைது செய்யப்பட்டவருடன் தொடர்புடைய 7 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.