மடுவில் ஊடகவியலாளர்களையும் தாக்க திட்டமிட்டிருந்த அடாவடி கும்பல் தப்பியோட்டம்!

பங்குத்தந்தை தலைமையில் கோயில் மோட்டை பகுதிக்குள் குழுவொன்று உள்நுழைந்து கோயில்மோட்டை விவசாயிகளை வன்முறைக்கு அழைக்கும் விதமாக நடந்துகொண்டதால் நேற்றையதினம் (26) பரபரப்பு நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

2021-ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்தே அரச காணியாக உள்ள மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டைக்காணியை பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் எங்களுக்கு வழங்க வேண்டுமென உண்ணாவிரத போராட்டம் உட்பட்ட பல போராட்டங்களை பல மாதங்களாக முன்னெடுத்து வந்த விவசாயிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநரால் அண்மையில் நீதி கிடைத்தது.

மேலும் தற்போது சிறுபோக பயிர் செய்கை இடம்பெற்று வருவதால், நீங்கள் குறித்த காணியில் சிறுபோக பயிர் செய்கையை மேற்கொள்ளுங்கள், அதற்கான அரச மானியங்களை உங்களுக்கு வழங்க உத்தரவிடுகிறேன் என ஆளுநர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இத்துடன் இக்காணி பிரச்சினை முடிவுக்கு வந்ததது, என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரின் உத்தரவைக்கூட மதிக்காமல் மன்னார் மாவட்ட அரச அதிகாரிகளின் துணையுடன் தொடர்ந்தும் பங்குத்தந்தைகளால் நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களுக்கு பல வடிவங்களில் பிரச்சினைகள் கொடுக்கப்பட்டு வருவதாக கோயில்மோட்டை அப்பாவி கிறிஸ்தவ விவசாயிகள் கவலை வெளியிட்டு வருகினறனர்.

இந்நிலையில்தான் கடந்த திங்கள் கிழமை காலை சில பங்குத்தந்தைகள் பெரியபண்டிவிரிச்சான் – மேற்கு கிராம சேவகர் அலுவலகத்திற்கு வந்து, ஆளுநரின் உத்தரவையும் மதிக்காமல் அங்கிருந்த பாலம்பிட்டி கமநல சேவைகள் உத்தியோகத்தர்களிடம், எங்களுக்கும் கோயில்மோட்டைக்காணியில் சிறுபோகம் (விவசாயம்) செய்ய இடம் தருமாறு கோரிய நிலையில், பங்குத்தந்தைகளுக்கும் – விவசாயிகளுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல பங்குத்தந்தைகள் வேக வேகமாக சென்று விட்டனர்.