கொரோனா நோயாளியின் உடலை வீதியில் விட்டு சென்ற சாரதி!

இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை அம்புலன்ஸ் சாரதியொருவர் வீதியில் விட்டுச் சென்ற சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் பணிபுரியும் நபரொருவர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் இறந்தவரின் உடலை, அவரது மனைவி வைத்தியசாலையிலிருந்து மின்மயானத்திற்கு தனியார் அம்புலன்ஸின் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது மின்மயானம் அருகே வைத்து வாடகையாக 10,000 ரூபாவை கொடுக்க வேண்டுமென சாரதி கேட்டுள்ளார்.

எனினும், தன்னிடம் 3000 ரூபா மாத்திரமே தற்போது இருப்பதாகவும், மீதி பணத்தை பின்னர் கொடுப்பதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாரதி, உடலை மயானம் அருகேயுள்ள நடைபாதையில் வைத்துவிட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது,

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.