இலங்கைப்பிரஜைகள் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு சீன மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஸ்ரீலங்காப் பிரஜைகள் சீன நிறுவனங்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள சீன மொழியைக் கற்றுக்கொள்வது சிறந்தது என்று முன்னாள் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே தமிழ் மொழியை சீனா திட்டமிட்டு அழித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கா அமைச்சர் இவ்வாறு சீன மொழி குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்திற்குரிய புதிய கட்டடத்தில் சீனாவின் நிதியுதவியுடன் இலத்திரனியல் நூலகமொன்று அண்மையில் நிர்மாணிக்கப்பட்டது.

அந்த நூலகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப்பலகை அண்மையில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான சீனத்தூதுவர் கியூ ஸென்ஹொங் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

அந்த நினைவுப்பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீனமொழிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதுடன் அதில் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி இடம்பெறவில்லை.

அந்த நினைவுப்பலகையில் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டதுடன் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் ஸ்ரீலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சீன மொழியின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

நீர்ப்பாசன அமைச்சர் – (08:55) சீன நிறுவனங்களிடம் நாங்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அல்லது சீன வேலைத்திட்டங்களில் நாங்கள் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எமக்கு சீன மொழித் தெரிந்திருக்க வேண்டும் என்பது மேலதிக தகுதியாக அமையும். அதேவேளை, அண்மையில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டமூலம் என்பது அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதல்ல.

அவ்வாறு எதிர்கட்சியினர் தெரிவிப்பது போல அரசாங்கத்திற்கு எந்தவொரு அவசரமும் இதில் இருக்கவில்லை. அவ்வாறு போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டத்தை தள்ளிவைத்திருந்தால் கொரோனா தொற்று முற்றிலும் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறியிருந்திருக்குமா? அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவரும்படி ஏகோபித்த விதமாகத் தெரிவித்திருந்தோம். அதற்கமைய உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்திலும் திருத்தங்கள் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்ட நிலையில் நாங்கள் எதிர்பார்த்த பாதித்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன” என தெரிவித்துள்ளார்.