ஆற்றில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி!

ஆற்றில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் ஆற்றுப்பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் குறித்த துப்பாக்கியை மீட்டு இன்று(28) மாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி(ரிவோல்வர்) இயங்குநிலையில் காணப்படுவதுடன் அமெரிக்க நாட்டு தயாரிப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.