மணமேடைக்கு வந்த மணமகள் தாலிகட்டும் நேரத்தில் மரணம்!

அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதை யாரும் யூகிக்க முடியாததுதான் வாழ்க்கை, அதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது.

இந்தியா உத்தரப்பிரதேசத்தின் எடவாஹ் மாவட்டத்தில், சமஸ்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது, அதன்படி திருமண நாள் கைகூடி வந்த நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக நடந்தது. முகூர்த்த நேரம் நெருங்கியது, அப்போது மணமேடைக்கு மணமக்கள் இருவரும் அழைத்து செல்லப்பட்டார்கள்.

தொடர்ந்து திருமண சடங்குகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தாலி கட்டும் நேரம் நெருங்கி வரும் நிலையில் புரோகிதர் தாலியை மணமகன் கையில் கொடுத்த சில நொடிகளில் மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் பதறிப் போன நிலையில், உடனடியாக மருத்துவர் அழைக்கப்பட்டார்.

மருத்துவர் வந்து மணப்பெண்ணைச் சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார் என மருத்துவர் தெரிவித்தார். இதனால் மொத்த திருமண மண்டபமும் சோகத்தில் மூழ்கியது. ஒருகட்டத்தில் மனதைத் தேற்றிக் கொண்டு மணமகளின் தங்கைக்குத் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து மணமகளின் உடலை ஒரு அறையில் வைத்து விட்டு பெரும் துக்கத்துடன் திருமணம் இடம்பெற்றது. இதற்கிடையே இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.