ஒட்டமாவடி மையவாடியில் வெள்ளிக்கிழமை வரை 301 சடலங்கள் அடக்கம்!

இலங்கையில் கோவிட்டினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை பதினான்கு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.

ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கோவிட்டினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட்டினால் மரணமடையும் சடலங்களை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் வெள்ளிக்கிழமை வரை 301 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 278, இந்து சடலம் 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 02, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 301 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சனிக்கிழமை அடக்கம் செய்வதற்கு பதினெட்டு சடலங்கள் கொண்டுவரப்படவுள்ளது. இதன்பிரகாரம் 319 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அத்தோடு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியினை பயன்படுத்தி கோவிட்டினால் மரணிப்பவர்களின் உடல்களைக் காட்டி சிலர் பணம் அறவிடுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு எமது சபையினூடாக பணம் அறவிடப்படவில்லை.

அவ்வாறு யாரும் பணம் அறவிடப்பட்டால் வழங்க வேண்டாம் என்றும், பணம் கோருபவர்களை எங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகின்றேன்.

கோவிட்டினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பிரதேச சபைக்கு ஓட்டமாவடி சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஆகியன பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் கோவிட்டினால் மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்குப் பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டின் கோவிட் மரணம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் வேறு பாகங்களிலும் அடக்கம் செய்வதற்கு உரிய இடங்களை அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous articleதமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும்- செல்வம் அடைக்கலநாதன்
Next articleஇளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொலை செய்து உடலை சிதைத்த கனேடிய நபருக்கு ஆயுள் தண்டனை!