இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொலை செய்து உடலை சிதைத்த கனேடிய நபருக்கு ஆயுள் தண்டனை!

இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொலை செய்து உடலை சிதைத்த வழக்கில் கனேடிய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் ஒஷாவா பகுதியை சேர்ந்த 48 வயதான ஆதம் ஸ்ட்ராங் என்பவருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 25 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவரும் வாய்ப்பில்லை என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றரை நாட்கள் நீண்ட இறுதி தீர்ப்பு விசாரணையில் கடுமையாக பேசிய நீதிபதி Joseph Di Luca, இரு பெண்களை மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியவர் அவர் என தெரிவித்துள்ளார்.

இரு குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ள சேதம் தொடர்பில் எந்த உணர்வும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இனி ஒருபோதும் உங்களை பொதுவெளியில் நடமாட அனுமதிக்க முடியாது என நீதிபதி Joseph Di Luca காட்டமாக தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் நீங்கள் செய்த குற்றங்களை பொதுமக்கள் மறக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பம் கண்டிப்பாக மறக்க வாய்ப்பில்லை என்றார்.

மேலும், இனி ஒருபோதும் இந்த நபர் பாதிக்கப்பட்ட அந்த இரு குடும்பங்களையும் எந்த காலகட்டத்திலும் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டர்ஹாம் பிராந்தியத்தில் வசிப்பவரான 18 வயது Rori Hache கடந்த 2017ல் கடத்தப்பட்டு, துஷ்பிரயோகத்தினிடையே ஆதம் ஸ்ட்ராங் என்பவரால் கொல்லப்பட்டார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் மரணத்திற்கு அதுவே காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலை துண்டு துண்டாக சிதைத்த ஆதம் ஸ்ட்ராங், தலை, கை, கால்கள் இல்லாத உடலை ஒன்ராறியோ ஏரியில் வீசியுள்ளார்.

அவரது குடியிருப்பில் அமைந்துள்ள கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவே, இந்த கொலை வழக்கில் ஆதம் ஸ்ட்ராங் சிக்கியுள்ளார்.

Rori Hache கொல்லப்படுவதற்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், அப்போது 19 வயதேயான Kandis Fitzpatrick என்ற இளம் பெண் ஆதம் ஸ்ட்ராங் கைகளில் சிக்க, அவரும் கொல்லப்பட்டதுடன், உடல் பாகங்கள் துண்டாக்கப்பட்டு, மறைவு செய்யப்பட்டார்.

இதுவரையில் அவரது உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், ஆதம் ஸ்ட்ராங் குடியிருப்பில் கொல்லப்பட்ட Kandis Fitzpatrick என்பவரின் டி.என்.ஏ மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விவகாரத்திலும் இதுவரை ஆதம் ஸ்ட்ராங் எந்த வருத்தமும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு அளிக்கப்படும் சலுகைகள் பெற வாய்ப்பில்லை என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.