ஆற்றில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு ஆற்றுவாய்ப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று (29) மாலை மட்டி எடுப்பதற்காக சென்ற வேளையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியை அண்மித்த ஆற்றிலேயே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காணாமல் போயிருந்த இளைஞர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.