தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை!

தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சினோபோர்ம் தடுப்பூசியை பங்களாதேஷுக்கு ($10) வழங்கியதை விட இலங்கைக்கு அதிக விலைக்கு ($15) கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் பங்களாதேஷின் கொள்முதல் ஒப்பந்தம் இன்னும் விவாதத்தில் உள்ளது என்றும் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றும் சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி ஒன்றுக்கு 15 டொலர் என்ற அடிபடையில் பெற்றுக்கொள்ளப்பட்ட 20 மில்லியன் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தடுப்பூசிகளின் விலை 18 டொலர் முதல் 40 டொலர் வரை இருக்கும் என்றும் பல காரணங்களால் விலைகள் மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும் தங்களால் முடிந்த குறைந்தபட்ச செலவு மற்றும் போட்டி விலையில் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் விலை நிர்ணயம் உள்ளிட்ட கொள்முதல் ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் கடந்த வாரம் தெளிவுபடுத்தியுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.