வவுனியாவில் பயணக் கட்டுப்பாட்டை மீறி அதிகளவு மக்கள் நடமாட்டம்!

வவுனியாவில் பயணக்கட்டுபாட்டை மீறி மக்கள் வீதிகளில் அதிகளவு நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் திறக்கப்பட்டுள்ளதையும், அங்கு மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.

நாட்டில் ஏற்படடுள்ள கொரோனா தாக்கம் அதிகரிப்பையடுத்து நாடு முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு நகரங்களில் தெரிவு செய்யப்பட்ட சில மொத்த விறப்பனை நிலையங்கள் கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை வழங்குவதற்கும்,

தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கும் மட்டுமே நாடு முழுவதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நடைமுறையே வவுனியாவிலும் உள்ள போதும் அந்த நடைமுறைகளை மீறி பல மொத்த விற்பனை நிலையங்களும், சில்லறை வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு விற்பனை இடம்பெறுவதுடன் அங்கு மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. இதனால் வீதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.

அத்துடன், வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தால் அதிகமானவர்களுக்கு பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் பயணிப்பதற்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளமையால் அதிகளவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதற்கும், அதிகளவு மக்கள் நடமாடுவதற்கும் கரணமாக அமைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அனுமதியளிக்கப்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள் கிராமப்புற கடைகளுக்கு பொருட்களை வழங்வும், அனுமதியளிக்கப்பட்ட சில்லறை விற்பனையகங்கள், மக்களுக்கு வீடுகளுக்கு கொண்டு சென்று பொருட்களை வழங்கவும் மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் எவரும் வர்த்தக நிலையங்கள் திறந்து பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வியாபாரம் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.