யாழில். நேற்று 2,948 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

யாழ்ப்பாணத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளின் மக்கள் எண்ணிக்கையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியை நேற்று பெற்றுக் கொண்டனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 61 கிராம அலுவலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி 11 கிராம அலுவலர் பிரிவுகளில் நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளில், இன்று முதல் மேலதிகமாக 22 கிராம அலுவலர் பிரிவுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு அப்பிரதேசத்தில் கூறிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தால் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வந்து தடுப்பு ஊசியை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.