வான்கூவரில் பைசர் தடுப்பூசிக்கு தவறான தடுப்பூசி பெற்றுக்கொண்ட 13 வயது சிறுமி!

வான்கூவரில் பைசர் தடுப்பூசிக்கு பதிலாக தமக்கு மாடர்னா தடுப்பூசி அளித்ததாக சிறுமி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

கனடாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி அளிக்கவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே Noora Alenezi என்ற 13 வயது சிறுமி தமக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

வான்கூவரில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி அனுமதிக்கப்பட்ட நிலையில் Noora Alenezi மற்றும் அவரது 14 வயது சகோதரர் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து வான்கூவர் கன்வென்ஷன் மையத்தில் தாயாருடன் இரு சகோதரர்களும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள சென்றுள்ளனர்.

அங்கே தடுப்பூசி அளித்த செவிலியர் சிறுமி நூராவிடம், அவருக்கு மாடர்னா தடுப்பூசி அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இதில் குழப்பமடைந்த நூரா, புதிதாக மாடர்னா தடுப்பூசியும் சிறார்களுக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டார்.

அதே நேரத்தில் நூராவின் 14 வயது சகோதரருக்கு மீண்டும் மாடர்னா தடுப்பூசி அளிக்கவிருந்த நிலையில், திடீரென்று அந்த செவிலியருக்கு அது தவறான தடுப்பூசி என்பது நினைவுக்கு வந்துள்ளது.

சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி மட்டுமே கனடாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் புரிந்து கொண்டு, உடனடியாக நூராவிடமும் அவர் தாயாரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

தடுப்பூசி அளிக்கும்போது கவனம் தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நூராவின் தாயார், இதுவொன்றும் சாதாரணமான தவறல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வான்கூவரில் மட்டும் நூரா உள்ளிட்ட 12 சிறார்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது அறிக்கையின் மூலம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மிக விரைவில் மாடர்னா தடுப்பூசியும் கனடாவில் சிறார்களுக்கு அளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், பைசருக்கு பதிலாக தற்போது மாடர்னா பெற்றுக்கொண்டுள்ளதால் ஆபத்தில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற தவறு இனி நடைபெறாமல் இருக்க கண்காணிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.