நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல்!

பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி நீக்கப்படும் வரை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து கலால் செய்தித் தொடர்பாளர் கபில குமாரசிங்க கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மதுபானசாலைகளையும் சீல் வைக்க கலால் ஆணையாளர் அனைத்து மாகாண மற்றும் மாவட்ட கலால் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இருந்தபோதிலும் நாட்டின் சில பகுதிகளில் மதுபானசாலைகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.