பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராகும் இலங்கை வீரர்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத், ஈடுபட்டு வருகிறார்.

நியூஸிலாந்தின் முன்னாள் வீரரான டேனியல் வெட்டோரிக்கு பதிலாக சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராகும் வாய்பில் ரங்கன ஹெரத், முன்னணியில் உள்ளார் என்பதை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் கூறுகையில், ‘ஹெரத் வேட்பாளர்களில் ஒருவர். அவர் நிச்சயமாக பதவிக்கு முன்னணியில் இருப்பவர். சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு முன்னர் அதை இறுதி செய்ய நாங்கள் முயற்சிப்போம்’ என கூறினார்.

இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் விவாதித்து வருவதாகவும், தனது புதிய பங்கு குறித்த இறுதி முடிவு இந்த வார இறுதியில் எடுக்கப்படும் என்றும் ரங்கன ஹெரத் கூறினார்.