பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த வாகனத்துடன் இருவர் கைது

நாடு பூராகவும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் பொலிசாரின் சைகையை மீறி பயணித்த சிறிய பட்டா ரக வாகன சாரதியையும், அவரோடு பயணித்த அவரது நண்பரையும் நேற்று (31) மாலை நிந்தவூரில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.

இவ்விடயம் பற்றி தெரிய வருவதாவது ;

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் குறித்த சிறிய பட்டா ரக லொரி வருவதை அவதானித்த போக்குவரத்துப் பொலிசார், அதனை நிறுத்துமாறு சைகை செய்தனர்.

இருந்தபோதும், பொலிசாரின் சைகையை மீறி வாகனத்தை நிறுத்தாமல், அதிக வேகத்தில் வாகனம் அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் குறித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்த இருந்தபோதும், குறித்த சாரதி வாகனத்தை நிறுத்தாமல் இன்னும் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

மேலும் வாகனம் ஓட்டிச் செல்லும் நேரத்தில், நிந்தவூர் பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் இராணுவ சோதனைச் சாவடியை அண்மித்த போது குறித்த வாகனத்தை ஊரின் பக்கம் திருப்புவதற்கு முயற்சி எடுத்த போது, அதற்கிடையில் இராணுவத்தினரும், வாகனத்தினை பின்தொடர்ந்து வந்த போக்குவரத்துப் பொலிசாரும் இணைந்து இவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதன்போது ஸ்தலத்துக்கு விரைந்த போக்குவரத்துப் பொலிசார் மற்றும் கல்முனை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் இரு இளைஞர்களிடத்திலும் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தினர்.

இதில் வாகனத்தினை செலுத்திவந்த சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கேட்டபோது ; தன்னிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை எனவும், அதனாலேயை பொலிஸாரிற்குப்பயந்து வாகனத்தினை வேகமாக ஓட்டிச் சென்றதாகவும், அண்மையில் போக்குவரத்து விதியை மீறிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு தனது சாரதி அனுமதி பத்திரம் பொலிசாரிடம் உள்ளதாகவும் தெரிவித்ததுடன், சாரதி அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக பொலிசாரினால் வழங்கப்பட்ட உத்தரவுப் பத்திரம் தன்னுடைய வீட்டில் இருப்பதாகவும் சாரதி பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதுபற்றி கேட்டபோது ;

குறித்த சாரதி அனுமதிப் பத்திரமானது தனது மைத்துனருடையது என அந்த சாரதி தெரிவித்தார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாய்ந்தமருது வெலிவோரியன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இந்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாகனத்தினை சோதனை செய்த பொலிசார் அங்கிருந்து ஒரு சாரதி அனுமதிப் பத்திரத்தினைக் கண்டெடுத்தனர்.