மட்டக்களப்பு இரத்த வங்கியில் பாரிய இரத்த தட்டுப்பாடு

கொவிட் தொற்று அச்சம் காரணமாக இரத்த வங்கி சென்று இரத்த கொடை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் காரணத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பாரிய இரத்த தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அன்றாடம் வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் மகப்பேற்று சிகிச்சைகள், புற்று நோயாளர்கள், சத்திரசிகிச்சை செய்பவர்கள், சிறார்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்டோர் இரத்த தேவையால் உயிருக்காக போராடி வருகின்றனர்.

இவ் இக்கட்டான சூழ்நிலையில் இரத்த தேவை குறைபாட்டை குறைப்பதில் ஓர் பங்களிப்பை வழங்க கரீத்தாஸ் எகட் பல்சமய இளைஞர் கழகம், இளையோர் அமைப்புகளை ஒன்றிணைந்து எதிர்வரும் 03ஆம் திகதி சாள்ஸ் மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவிட் தொற்று அச்சமின்றி தாராளமாக இரத்தத்தை தானம் செய்ய முன்வருமாறு கோரியுள்ளதுடன், இரத்தக் கொடையாளர்களின் உன்னத சேவையை கௌரவித்து இதன்போது சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.