யாழில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை!

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போதைய தடுப்பூசி வழங்கல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற் திட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் முதல் நாளில் 2 ஆயிரத்து 948 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள். இரண்டாவது நாளிலேயே 6000 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள். நேற்று 13 ஆயிரத்து 914 ஆயிரம் பேர் தடுப்பூசியினை பெற்றிருக்கின்றார்கள்.

இன்றும் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நடைபெறுகின்றது. இன்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியைபெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சிலிருந்து தடுப்பூசியினை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அந்த அறிவுறுத்தலுக்கமைய இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு விசேடமான தடுப்பூசி வழங்கல் செயற்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் 2100 பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது.

முதல் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி கிடைத்திருக்கின்றது. அநேகமாக இன்று மாலை அல்லது நாளையுடன் அந்த ஐம்பதாயிரம் தடுப்பூசிகளினை முற்றாக பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இதுவரை தடுப்பூசி போட்டவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் பதிவாகவில்லை. பாதகமான விளைவுகள் எதுவும் பதிவாகவில்லை எனவே பொதுமக்கள் தயங்காது அச்சப்படாது பயப்படாது தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்.“ என்றார்.