எண்ணெய் கசிவு ஏற்பட்டால் உடனடியாக செயற்பட கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் தயார்நிலையில்!

எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் எண்ணெய் படிமங்களை அகற்றும் வசதிகளை கொண்ட, கடல் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று மூழ்கும் எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலுக்கு அண்மையில் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல், நீர்க்கசிவு காரணமாக கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை முன்னதாக தெரிவித்தது.

இதன்காரணமாக குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் விளைவாக திக்வோவிட்ட பிரதேசம் முதல் நீர்கொழும்பு – கெபுன்கொட பிரதேசம் வரையிலான கடற்பகுதியில் எண்ணெய் படிமங்கள் மிதக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதுவரையில் எக்ஸ்-ப்ரெஸ் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பான தகவல்கள் எவையும் பதிவாகவில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனை உடனடியாக முகாமை செய்வதற்காக சிறிய படகொன்று திக்கோவிட்ட கடல்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.